ஈரானியர்களுக்கு (Iranians) நுழைவுத் தடை விதித்த அவுஸ்திரேலியா - புதிய சட்டம் அவசரமாக நிறைவேற்றம்

அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கான புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பானிஸ் (Albanese) தலைமையிலான அவுஸ்திரேலிய மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகக் கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி, தற்காலிக விசாக்களைக் (temporary visas) கொண்ட குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் 6 மாதங்கள் வரை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது; இதில் முதல்கட்டமாக ஈரான் (Iran) பெயரிடப்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது நிலவிவரும் போர் மற்றும் உள்நாட்டுப் பதற்றங்கள் காரணமாக, தற்காலிக விசாக்களில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் ஈரானியர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் அல்லது வெளியேற முடியாது என்ற அச்சம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு வெளியே இருந்து விசிட்டர் (Visitor - subclass 600) விசா வைத்திருக்கும் ஈரானியக் கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கே இந்தத் தடை பொருந்தும். ஏற்கனவே அவுஸ்திரேலியாவிற்குள் இருப்பவர்கள் அல்லது பயணத்தில் (in transit) இருப்பவர்களுக்கும், அவுஸ்திரேலியப் பிரஜைகள் அல்லது நிரந்தர வதிவிட உரிமையாளர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் (Tony Burke), 'போர்ச் சூழலுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பல விசாக்கள், இப்போது விண்ணப்பித்திருந்தால் வழங்கப்பட்டிருக்காது' என்று குறிப்பிட்டார்.


