பிராந்தியங்களில் அதிக நாட்கள் வேலை செய்ய வேண்டும்: மூன்றாம் ஆண்டு backpacker visa உச்சவரம்பு ஐந்து மடங்கு உயர்வு
கேர்ன்ஸ் (Cairns) நகரில் செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்நாட்டு விவகார அமைச்சர் டோனி பேர்க் (Tony Burke) working holiday maker திட்டத்தில் இம்மாற்றங்களை உறுதிப்படுத்தினார். விவசாய, சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளின் எதிர்ப்புக்குப் பிறகு, செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட குடியேற்ற மாற்றங்களை அரசு மறுஆய்வு செய்ய நேர்ந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு visa கோருபவர்களுக்கு முன்மொழியப்பட்ட ballot (குலுக்கல்) முறை, கோடை பருவத் தொழிலாளர் தேவையைப் பாதிக்காத வகையில், அடுத்த வருட ஆரம்பம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல், இரண்டாம் ஆண்டு visa-வுக்கு தகுதி பெற backpacker-கள் பிராந்தியங்களில் 88 நாட்களுக்குப் பதிலாக 120 நாட்கள் வேலை செய்ய வேண்டும். 28 பெப்ரவரி 2027க்கு முன் தங்கள் பிராந்திய வேலையை நிறைவு செய்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள். மூன்றாம் ஆண்டுக்குத் தகுதி பெற ஆறு மாத வேலை என்ற நிபந்தனை மாறாமல் உள்ளது; எனினும், முன்மொழியப்பட்ட ballot மூலம் வழங்கப்படும் மூன்றாம் ஆண்டு visa-களின் உச்சவரம்பு, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 5,000லிருந்து 25,000 ஆக உயர்த்தப்படுகிறது.
இத்தொகுப்பு நடவடிக்கைகள் மூலம், அரசு அறிவித்த நிகர வெளிநாட்டுக் குடியேற்ற (net overseas migration) இலக்குகளான இவ்வருடம் 245,000 மற்றும் 2027-28 மற்றும் அதற்குப் பின்னர் 225,000 ஆகியவற்றை அப்படியே நிறைவேற்ற முடியும் எனவும், அதே நேரம் பிராந்தியங்களுக்கு அதிக தொழிலாளர்கள் கிடைப்பார்கள் எனவும் பேர்க் தெரிவித்தார். இரண்டாம் ஆண்டு visa விண்ணப்பதாரர்கள் இனி மூன்று மாதங்களுக்குப் பதிலாக நான்கு மாதங்கள் பிராந்திய வேலை செய்ய வேண்டியதால், பிராந்திய முதலாளிகளுக்கு முன்னைவிட அதிக தொழிலாளர் கிடைப்பார்கள் என்றார்.
முன்னாள் அரசு ஐக்கிய ராச்சியத்துடன் (United Kingdom) கையெழுத்திட்ட விடுதலை வாணிக உடன்படிக்கையின் (free trade agreement) கீழ், பிரித்தானிய backpacker-கள் பிராந்திய வேலை நிபந்தனைகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர். இது ஆஸ்திரேலியாவுக்கு நல்ல முடிவல்ல என பேர்க் கருத்துத் தெரிவித்தார். பிரித்தானிய backpacker visa-களை மெதுவாகச் செயலாக்கியதே (go-slow) மூன்றாம் ஆண்டு ballot உச்சவரம்பை உயர்த்த வழிவகுத்தது என்றார். லண்டனுடன் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் தொடர்கின்றன என்றும், காலக்கெடு கூற விரும்பாவிட்டாலும், முன்னர் பேசப்பட்டதைவிட மிகச் சிறந்த உடன்பாடு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா வரும் பிரித்தானிய backpacker-கள் நகரங்களில் மட்டும் காலம் செலவிடாமல் பிராந்தியங்களின் திறன் பற்றாக்குறையை நிரப்ப உதவும் வகையில், ஐக்கிய ராச்சியத்துடன் ஒரு உடன்பாட்டை அரசு நெருங்கியுள்ளது. குறிப்பாக இளம் பிரித்தானியர்களின் எண்ணிக்கை சமீப வருடங்களில் பெரிதும் உயர்ந்துள்ளது; செப்டம்பர் மாற்றங்களின் பிரதான இலக்கும் அவர்களே ஆவர்.