காலநிலை பேரழிவிலும் இரட்டை லாபம் பார்க்கும் பணக்காரர்கள் - ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கை

காலநிலை மாற்றத்தால் (climate change) உலகம் முழுவதும் கடுமையான இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், உலகப் பணக்காரர்கள் இதன் மூலமும் பெரும் லாபம் ஈட்டுவதாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் (Oxfam International) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 'டிசாஸ்டர் டிவைட்' (Disaster Divide) என்ற புதிய ஆய்வறிக்கையில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக மக்கள் தொகையில் வெறும் 0.1 சதவீதமான மிக உயரிய பணக்காரர்கள் (சுமார் 80 இலட்சம் பேர்), உலகின் ஏழ்மையான 44 சதவீத (3.5 பில்லியன்) மக்களின் மொத்தக் கார்பன் உமிழ்வை (carbon emissions) விட அதிக மாசை ஏற்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் ஏற்படும் கடும் வெப்ப அலைகள், வெள்ளம், வறட்சி ஆகியவற்றில் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மக்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழக்கின்றனர்.
கோடீஸ்வரர்கள் கார்பன் உமிழ்வை அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்து முதல் லாபத்தை ஈட்டுகின்றனர். பின்னர் அதனால் ஏற்படும் பேரழிவுகளுக்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளை (disaster recovery) மேற்கொள்ளும் நிறுவனங்களிலும் முதலீடு செய்து இரண்டாவது லாபத்தைப் பெறுகின்றனர் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த மறுசீரமைப்புச் சந்தை 2029-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 92 பில்லியன் டாலராக (தற்போதைய சுமார் 70 பில்லியனில் இருந்து) உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்துறையின் 217 நிறுவனங்களில் பிளாக்ராக் (BlackRock), வான்கார்ட் (Vanguard) போன்ற முன்னணிச் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் அதிக முதலீடுகளைக் கொண்டுள்ளன.
பணக்காரர்களின் ஒரு வருடக் கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடும் வெப்ப அலையால் ஆண்டுக்கு 19 இலட்சம் பேர் கூடுதலாக உயிரிழக்க நேரிடும் எனவும், இதில் 78 சதவீத இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் நிகழ்கின்றன எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக மாசு ஏற்படுத்தும் பணக்காரர்கள் மீது கடுமையான செல்வ வரி மற்றும் சொகுசு வரிகளை (wealth and luxury taxes) விதித்து, அப்பணத்தை நேரடியாக ஏழை மக்களின் மறுசீரமைப்புக்கு வழங்க வேண்டும் என ஆக்ஸ்பாம் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

