கோவ்பே (GovPay) பெயரில் போலி அபராதக் குறுஞ்செய்திகள் - டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy) எச்சரிக்கை

இலங்கையில் கோவ்பே (GovPay) பெயரைப் பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் செலுத்துமாறு கோரும் போலி குறுஞ்செய்திகள் (SMS) பரவி வருவதாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் இந்தச் செய்திகளும் அவற்றில் வழங்கப்படும் இணைப்புகளும் முற்றிலும் போலியானவை என்றும், அவை இணைய மோசடியின் (online fraud) ஒரு பகுதி என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக, அபராதம் செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தும் வகையில் இச்செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அது குறிப்பிட்டது.
இவ்வாறான அபராதங்களைச் செலுத்துமாறு கோவ்பே தளத்தின் மூலம் எந்தவொரு அரச நிறுவனமும் குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை என்றும் அமைச்சு பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கமைய, சந்தேகத்திற்கிடமான செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும், அவற்றிலுள்ள இணைப்புகளைத் திறக்கக்கூடாது, தனிப்பட்ட அல்லது வங்கிக் கணக்கு விபரங்களைப் பகிரக்கூடாது, அத்தகைய செய்திகளுக்குப் பதிலளிக்கக்கூடாது என்ற அறிவுறுத்தல்களை அமைச்சு வெளியிட்டுள்ளது. மேலும், உண்மையான அரச சேவைகள் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அரச இணையதளங்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே உறுதி செய்து கொள்ளுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இணைய மோசடிகளில் சிக்காமல் இருக்கப் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அமைச்சு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.


