திருகோணமலை (Trincomalee) கப்பல்துறை துப்பாக்கிச் சூட்டு: மூன்று சந்தேகநபர்கள் கைது

திருகோணமலை (Trincomalee), கப்பல்துறை சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 2 ஆம் திகதி, வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டச் சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, நவம்பர் 6 ஆம் திகதி திக்வெல்ல பகுதியில் மாத்தறை (Matara) பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த மற்றைய இருவரிடமிருந்து 32 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் (ice) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
விசாரணைகளில், இவர்கள் கொலைச் சதிக்கு உடந்தையாகச் செயற்பட்டது தெரியவந்ததையடுத்து, அவர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24, 28 மற்றும் 34 வயதுடைய திக்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


